ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள், செல்போன் திருட்டு 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள், செல்போனை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாத்தமங்கலம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தனவேல் மனைவி பூங்கோதை (வயது 52). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணம் அருகே ஆலங்குடியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு அவர் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்கோதை உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 மடிக்கணினிகள் மற்றும் ஒரு செல்போனை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
2 பேர் கைதுஇதுகுறித்து பூங்கோதை ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் பூங்கோதை வசிக்கும் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ்(22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மாமங்கலம் காலனியை சேர்ந்த தனது நண்பர் வீரமணி(28) என்பவருடன் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகள் மற்றும் செல்போனை திருடியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து வீரமணி, விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 மடிக்கணினிகள், செல்போனை போலீசார் கைப்பற்றினர்.