சேலம் அருகே அதிரடி சோதனை: சாலைவரி செலுத்தாத 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
சேலம் அருகே மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி அதிரடியாக சோதனை நடத்தி, சாலைவரி செலுத்தாத 2 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தார்.
சேலம்,
சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வரும் ஆம்னி பஸ்கள் முறையான வழித்தட அனுமதி(பெர்மிட்) இன்றியும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சில ஆம்னி பஸ்கள் சாலைவரி செலுத்தாமல் இயக்கப்படுவதாகவும் சேலம் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் பொன்.செந்தில்நாதனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சேலம் அருகே சென்னை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உடையாப்பட்டி பகுதியில் சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வரும் ஆம்னி பஸ்கள் உள்பட இதர வாகனங்களை சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர்.
2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆம்னி பஸ்சில் புதுச்சேரி பதிவெண் இருந்தது. மேலும் தமிழ்நாட்டில் சாலையில் ஓட்டுவதற்கான வரியும் கட்டவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் இதுபோல சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற ஒரு ஆம்னி பஸ்சையும் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி பதிவெண் கொண்ட, அந்த ஆம்னி பஸ்சும் தமிழ்நாட்டில் இயக்குவதற்கான சாலைவரி செலுத்தவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து சேலம், கோவை சென்ற 2 ஆம்னி பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவை சேலம் கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன.
சாலைவரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்னி பஸ்சிற்கு ரூ.48 ஆயிரமும், இன்னொரு ஆம்னி பஸ்சிற்கு ரூ.26 ஆயிரமும் என மொத்தம் ரூ.74 ஆயிரம் சாலைவரி விதிக்கப்பட்டது. உரிய சாலைவரியை செலுத்தியபின்னர் அந்த 2 ஆம்னி பஸ்களும் விடுவிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்தார்.