கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: குற்றவாளி சயன் கைது


கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: குற்றவாளி சயன் கைது
x
தினத்தந்தி 7 Jun 2017 5:00 AM IST (Updated: 7 Jun 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி சயன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி,

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி சயன் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டதும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காவலாளி கொலை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24–ந் தேதி அதிகாலை 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு எஸ்டேட்டின் 10–வது நுழைவு வாயிலில் பணியாற்றிய காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது.

பின்னர் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிவிட்டு பங்களாவின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களையும், முக்கிய ஆவணங்களையும் மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து விட்டு தப்பிச்சென்றனர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது.

சாலை விபத்தில் பலி

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது கூட்டாளியான கேரள மாநிலம் திருச்சூர் இரிஞாலக்குடாவைச் சேர்ந்த சயன் (வயது 36) கடந்த ஏப்ரல் மாதம் 29–ந் தேதி பாலக்காடு அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருடைய மனைவி வினுப்பிரியா (31), மகள் நீது (6) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சயன் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கூலிப்படை தலைவன் மனோஜ் சாமியார், உதயகுமார், தினேசன், திபு, வயநாடு மனோஜ், குட்டி பிஜின், சந்தோஷ்சாமி ஆகியோர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜஷ்மீர்அலி, ஜித்தின்ராய் ஆகியோர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் மஞ்சேரி சிறையில் உள்ளனர்.

சயன் கைது

இந்த நிலையில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சயன் நேற்று காலை 8 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனே நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு எஸ்டேட்டிற்கு முகத்தை மூடியபடி சயன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர், நடந்த சம்பவத்தை நடித்து காட்டினார். போலீசார் அதை வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் கோத்தகிரி போலீஸ் நிலையத்திலும் சயனிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சயன் கூறிய விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

விரைவில் குற்றப்பத்திரிகை

சயனிடம் நடத்திய விசாரணையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்தார்.

சயனிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கைக்கெடிகாரங்கள், கண்ணாடி அலங்கார பொருட்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 3 கார்கள், கையுறைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக சயனை காவலில் எடுத்து விசாரிக்கவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story