ஆணவக் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன இன்று பரிசோதனை செய்யப்படுகிறது


ஆணவக் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன இன்று பரிசோதனை செய்யப்படுகிறது
x
தினத்தந்தி 8 Jun 2017 8:00 PM GMT (Updated: 8 Jun 2017 7:21 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆணவக் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆணவக் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று(வெள்ளிக்கிழமை) அந்த உடல் பாகங்கள் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ஆணவக்கொலை

ஏரல் அருகே உள்ள மணலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக துப்பு துலங்காத இந்த வழக்கில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர், மணலூரில் யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த என்னுடைய உறவினரின் 17 வயதான மகள், வெளியூரில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்தார். அந்த சிறுமியை முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி, பெற்றோர் கால்வாய் கிராமத்துக்கு வரவழைத்தனர். பின்னர், அந்த சிறுமியின் வாயில் வி‌ஷத்தை ஊற்றி பெற்றோர் ஆணவக் கொலை செய்தனர். நான் அந்த சிறுமியின் உடலில் கல்லைக் கட்டி, கால்வாய் கிராமத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள வல்லகுளம் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினேன் என்று தெரிவித்தார்.

உடல் கண்டெடுப்பு

இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் வல்லகுளம் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு வாலிபரை அழைத்து சென்றனர். அங்குள்ள கிணற்றில் சுமார் 25 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதையடுத்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி இரவு வரையிலும் நடந்தது. நேற்று 2–வது நாளாக கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன் (செய்துங்கநல்லூர் பொறுப்பு), கிங்ஸ்லி தேவ ஆனந்த் (ஏரல்), செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் அய்யனார், வல்லகுளம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த ஏகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

மதியம் 12 மணி அளவில் கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. கிணற்றுக்குள் அதிகளவு சேறும் சகதியுமாக இருந்தது. அதில் சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் எலும்புக்கூடாக காட்சி அளித்தது. அதில் பெரிய கல்லும் கட்டப்பட்டு இருந்தது.

இன்று, மருத்துவ பரிசோதனை

தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் அய்யனார், கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி, அங்கு கிடந்த சிறுமியின் சிதைந்த உடல் பாகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் முன்னிலையில், கிணற்றில் இருந்து சிறுமியின் சிதைந்த உடல் பாகங்களை எடுத்து, மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை முடித்து கொண்டு, ஏரல் அருகே எரித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story