மீன்பிடி தடை காலம் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்


மீன்பிடி தடை காலம் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:45 AM IST (Updated: 10 Jun 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடை காலம் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுக மீன்பிடி தளத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், சித்திரைப்பேட்டை, ராசாப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு மீன்கள் வரத்து இருக்கும். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் குறிப்பாக மத்திவகை மீன்களாகும். இதை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி, அதனை கேரளாவுக்கு லாரிகள் மூலம் ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பி வைப்பார்கள். இந்த மீன்பிடி தொழிலை நம்பி 20–க்கும் மேற்பட்ட ஐஸ் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

மீன்பிடி தடைகாலம்

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல் 15–ந்தேதி முதல் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என்று அரசு அறிவித்து இருந்தது. இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்காமல், கடலோர பகுதியிலேயே மீன்பிடித்து வருவார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தை 61 நாட்களாக நீட்டித்து, அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடை காலம் வழக்கம் போல் ஏப்ரல் 15–ந்தேதி தொடங்கியது.

படகுகள் சீரமைப்பு

இந்த தடைகாலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகள், படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோன்று தற்போதும் மீனவர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். படகுகளுக்கு புதிதாக வர்ணம் பூசுவது, என்ஜினை சரிசெய்வது மற்றும் சேதமான பலகைகளை மாற்றி அமைப்பது போன்ற சீரமைப்பு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தடைகாலம் முடிந்தவுடன், ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீனவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர்.


Next Story