ஆறுகளில் மணல் எடுக்க தடை கோரி வழக்கு தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
தமிழக ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தமிழக ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆறுகளில் மணல் கொள்ளைமதுரையைச் சேர்ந்தவர் இருளாண்டி. சமூகநீதி பேரவை செயலாளரான இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மணல் ஆற்றுப்படுகைகளின் சொத்து. ஆறுகளில் மணல் அதிகமாக இருந்தாலே நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழைநீரையும் சேமிக்க முடியும். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் சார்பில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் டெல்டா உள்பட அனைத்து விவசாய பகுதிகளிலும் நீரை சேமிக்க முடியாமல் போகிறது. அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இங்கு விவசாயம் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதிகளாக விளங்கிய தாமிரபரணி, வைகை, பாலாறு போன்ற முக்கிய ஆறுகளில் மணல் சூரையாடப்பட்டுள்ளது.
கடுமையான சட்டம்ஆனால் கேரளாவில் 45 ஆறுகள் ஓடுகின்றன. அங்கு ஆறுகளில் ஒரு கைப்பிடி மணல் கூட எடுக்க முடியாத அளவுக்கு சட்டங்கள் கடுமையாக உள்ளன. இதனால் தான் வருடம் முழுவதும் கேரளா பசுமைப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 5–ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்படும் என முதல்–அமைச்சர் அறிவித்தார். அந்த 3 ஆண்டுகளுக்குள்ளாக தமிழக ஆற்றுப்படுகைகளில் மணல் முற்றிலுமாக அள்ளப்பட்டு இயற்கை வளங்கள் முழுவதுமாக அழிந்துவிடும். குவாரிகளை அரசே ஏற்று நடத்தினாலும், தொடர்ந்து மணல் எடுக்கப்படுவதால் ஏற்படும் விளைவு ஒன்று தான்.
தடை விதிக்க வேண்டும்வேளாண்மை, சுற்றுச்சூழல், குடிநீர் ஆகியவற்றை பாதுகாக்க தமிழகத்தில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். கட்டிடப்பணிகளுக்கு கேரளாவில் உள்ளது போல கிரசர்தூசி பயன்படுத்த அறிவுறுத்துவது சிறந்தது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளில் இருந்து மணல் எடுப்பதை முழுவதுமாக தடுக்கும் வகையில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நோட்டீஸ்இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, “ஆற்றுப்படுகைகளில் மணல் எடுப்பதை உடனடியாக நிறுத்த இயலாது. படிப்படியாக நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது“ என்றார்.
இதையடுத்து இந்த மனு குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 12–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.