எம்.எல்.ஏ.க்கள் கைதை கண்டித்து நடக்க இருந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு


எம்.எல்.ஏ.க்கள் கைதை கண்டித்து நடக்க இருந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்கள் கைதை கண்டித்து நடக்க இருந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை

எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று நடக்க உள்ள தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கை முடித்துவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

எம்.எல்.ஏ.க்கள் கைது

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரத்திலும் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த 2010–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. இதன்படி புதுக்கோட்டையில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வந்தது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை பெரியண்ணன்அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோர் கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். ஆனால், அந்த விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டால் பிரச்சினை ஏற்படும் என்று கூறி எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க. முக்கிய பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.

அனுமதி மறுப்பு

அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களை பங்கேற்கவிடாமல் தடுத்ததுடன், அவர்களை கைது செய்தது அரசின் பாரபட்சத்தையே காட்டுகிறது. இதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஜூன் 11–ந்தேதி (அதாவது இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்கி, போலீஸ் பாதுகாப்பு தருமாறும் மனு கொடுத்தோம். ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த அரசியல் அமைப்பு சட்டம் அனுமதித்து உள்ளது. எனவே அரசு விழாவில் பங்கேற்க சென்ற மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிப்பதுடன், உரிய பாதுகாப்பு வழங்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

அனுமதி வழங்கப்பட்டது

மதுரை ஐகோர்ட்டு நேற்று விடுமுறை என்பதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்வதற்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அனுமதித்தார். இதைதொடர்ந்து இந்த மனு நேற்று அவர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தி.மு.க. போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது. இதே கோரிக்கை தொடர்பாக வேறு பிரச்சினை எழுந்தால் மனுதாரர் மீண்டும் கோர்ட்டை நாடலாம்“ என்று உத்தரவிட்டார்.


Next Story