ஒரேநாள் இரவில் 4 கோவில்களில் நகைகள்– பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுக்கடை அருகே ஒரே நாள் இரவில் 4 கோவில்களில் நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நித்திரவிளை,
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்பிகாடு கள்ளியோடு பகுதியில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகளை முடிந்த பின்னர், பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலையில் பூசாரி கோவிலுக்கு வந்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கோவில் நிர்வாகிகள், அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
நகை கொள்ளைநள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்க காப்பு, தங்க தாலி சங்கிலி, நெத்திச்சுட்டி, தங்கபொட்டுகள் போன்ற நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மேலும், கோவிலின் உட்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 3 உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி தேவதாஸ், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், சப்–இன்ஸ்பெக்டர் போஸ்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடத்த கோவிலை பார்வையிட்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவுசெய்தனர். கொள்ளைபோன அம்மன் நகைகள் 10½ பவுன் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் 3 கோவில்கள்...கொள்ளை நடத்த கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பத்ரேஸ்வரி இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து 1 பவுன் நகையையும், உண்டியலை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் அருகே உள்ள அப்பட்டுவிளை இசக்கியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்த மர்ம கும்பல் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளது.
காப்புகாடு அக்களாபுரத்தில் மிகப்பழமையான சிவன்கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இக்கோவிலிலும் கதவை உடைத்து மர்ம நபர்கள் 1 பவுன் நகையை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஒரே நாள் இரவில்...ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கோவில்களில் கொள்ளை நடந்துள்ளதால் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த துணிகர சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
4 கோவில்களிலும் சேர்த்து 18½ பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.