நூற்பாலை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நூற்பாலை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jun 2017 11:00 PM GMT (Updated: 12 Jun 2017 6:40 PM GMT)

கோபியில் நூற்பாலை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அம்பிகை நகரை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நம்பியாம்பாளையத்தில் ஒரு நூற்பாலை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஹேமா. நேற்று முன்தினம் இரவு பாபு நூற்பாலைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி ஹேமா மட்டும் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணிக்கு அவர் தூங்கி எழுந்து பார்த்தார். அப்போது அவரது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தார். அந்த பீரோவில் இருந்த 15 பவுன் நகையை காணவில்லை. மேலும் வீட்டின் சமையல் அறை கதவும் திறந்து கிடந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து பாபு கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ‘யாரோ மர்மநபர்கள் வீட்டின் மேல்மாடி வழியாக ஏறி உள்ளே குதித்து படுக்கை அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை திருடிவிட்டு சமையல் அறை கதவை திறந்து தப்பிச்சென்றுள்ளனர்’ என்பது தெரியவந்தது. மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கைரேகையை பதிவு செய்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நூற்பாலை உரிமையாளர் வீடு புகுந்து 15 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story