கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி


கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

80 மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் உருண்டு மாற்றுத்திறனாளி போராட்டம் நடத்தினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான மக்கள் மனு கொடுக்க வந்தனர். அப்போது ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளி கையில் கோரிக்கை அட்டையை பிடித்தபடி சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை தடுத்து, விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 80 மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சாலையில் உருண்டு போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி, அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

அடிப்படை வசதிகள்

அதன்பேரில் கலெக்டரிடம் அவர் கொடுத்த மனுவில், தாண்டிக்குடியில் சாலையோரத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தேன். இதுவரை மதுக்கடையை அகற்றவில்லை. இதனால் வருகிற 28–ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதேபோல் தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர், பணியாளர்கள் முறையாக பணிக்கு வரவேண்டும்.

மேலும் குடிநீர் மற்றும் சாலை வசதி, பஸ் வசதி செய்து தரவேண்டும், வங்கி கிளை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை 80 மனுக்கள் கொடுத்துள்ளேன். அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாண்டிக்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story