அம்பத்தூர் ரெயில்நிலையம் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அம்பத்தூர் ரெயில்நிலையம் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jun 2017 11:08 PM GMT (Updated: 2017-06-13T04:38:10+05:30)

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி,

சென்னை அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக்கோரி சுற்றுவட்டார பகுதிகளான அழகேசன் நகர், ராமாபுரம், சக்தி குடம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200–க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6 மணிக்கு கடைமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது.

சாலை மறியல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ரெயில் நிலையம் அருகே இயங்கி வரும் மதுக்கடையால் பொதுமக்களுக்கு மிகுந்த இன்னல்கள் ஏற்படுகிறது. இதனால் அந்தக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அந்த கடை மூடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் பின்னர் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Next Story