ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்தபோது சிக்கினர்


ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்தபோது சிக்கினர்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:52 AM IST (Updated: 13 Jun 2017 4:52 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டனர்.

செங்குன்றம்,

சென்னை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் ரவி. வக்கீலாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு இவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பிரபல ரவுடி அரவிந்தன் (வயது 30) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அரவிந்தன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அரவிந்தன் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த அவரது நண்பர் சதீஷ்குமார்(31) ஆகிய இருவரும் மாதவரம் தட்டான்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

சிறையில் அடைப்பு

அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் பட்டாக்கத்திகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம், ‘‘எங்களை யாரேனும் கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே எங்கள் தற்காப்புக்காக பட்டாக்கத்திகளை வைத்திருந்தோம்’’ என தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story