விடுதி கணக்காளர் கொலை கள்ள தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? போலீசார் விசாரணை


விடுதி கணக்காளர் கொலை கள்ள தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Jun 2017 4:45 AM IST (Updated: 14 Jun 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலையில் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் விடுதி கணக்காளர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கள்ளத்தொடர்பு தகராறில் கொலை நடந்ததா? என்பது குறித்து ஏலகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

திருப்பத்தூரை அடுத்த மட்றபள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). எம்.ஏ., பி.எட் பட்டதாரியான இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது இவருக்கும் லதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களது மகன் அன்பழகன் பிளஸ்–2 படித்து வருகிறார்.

அன்பழகன் பிறந்த சில மாதங்களிலேயே லட்சுமணன் ஆசிரியர் வேலையையும் விட்டுவிட்டு மனைவி லதாவை பிரிந்து ஏலகிரி மலை பகுதியில் உள்ள புங்கனூர் பகுதிக்கு சென்று விட்டார். அங்கு அவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிங்காரம் என்பவர் மனைவி கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன்–மனைவி போல் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

கணக்காளர்

லட்சுமணன் ஆசிரியர் வேலையை உதறிவிட்டு வந்தபின்னர் ஏலகிரி மலையில் உள்ள விடுதிகளில் கணக்காளராக வேலைபார்த்தார். அனைத்து விடுதிகளுக்கும் கணக்கு வழக்கை சரிபார்த்து வருமான வரி கட்டும் வேலையை அவர் செய்து வந்தார். இதனிடையே அவருக்கும் புத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் கவிதா வீட்டில்தான் அவர் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மது குடிப்பதற்காக சென்ற லட்சுமணன் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை புங்கனூர் அருகே மலைப்பாதையில் முட்புதரில் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலையாளிகள் யார்?

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஏலகிரி சப்–இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். லட்சுமணனை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் அந்த தகராறில் அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து துப்பு துலக்குவதற்காக அவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்து வருகின்றனர். அதன் மூலம் கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரித்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story