அரசு பள்ளியில் மாணவிகளிடம் ரூ.500 நன்கொடை வாங்குவதாக குற்றச்சாட்டு
அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவிகளிடம் ரூ.500 நன்கொடை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் காயரம்பேடு, கன்னிவாக்கம், ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேறு பள்ளிகளில் இருந்து பிளஸ்–1 வகுப்பில் சேரும் மாணவிகளிடம் பள்ளி தலைமை ஆசிரியை லதா ரூ.500 நன்கொடை கேட்பதாகவும், அந்த பணத்தை பள்ளி அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் செலுத்திவிட்டு ரசீது வாங்கி பள்ளி தலைமை ஆசிரியையிடம் காண்பித்த பிறகுதான் மாணவியின் சேர்க்கை உறுதிசெய்யப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்கள்.
விசாரணைஇதையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜரத்தினம் மற்றும் அதிகாரிகள் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் வந்தனர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் லதா, சக ஆசிரியர்கள் மற்றும் புதிதாக பள்ளியில் சேருவதற்கு வந்த மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்திவிட்டு சென்றனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்:–
புதிதாக சேரும் பிளஸ்–1 மாணவிகளிடம் பள்ளி அருகே உள்ள தனியார் ஜெராக்ஸ் கடைக்காரர் மூலம் ரூ.500 நன்கொடை வாங்குவதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் அறிக்கை காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும், அவர் சென்னையில் உள்ள டி.பி.ஐ அலுவலக கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.