மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது: கடலூர் மீனவர்கள் நாளை முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்கிறார்கள்
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது கடலூர் மீனவர்கள் நாளை முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்கிறார்கள் படகுகளில் டீசல், ஐஸ் கட்டிகள் நிரப்பும் பணி மும்முரம்
கடலூர் முதுநகர்,
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே கடலூர் மீனவர்கள் நாளை முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்கிறார்கள். இதற்காக நேற்று படகுகளில் டீசல், ஐஸ் கட்டிகள் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது.
இனப்பெருக்கத்துக்£க மீன்பிடிக்க தடைகடலூர் துறைமுக மீன்பிடி தளத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், சித்திரைப்பேட்டை, ராசாப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு மீன்கள் வரத்து இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல் 15–ந்தேதி முதல் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆகும். ஆனால் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தை 61 நாட்களாக நீட்டித்து, அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடை காலம் வழக்கம் போல் ஏப்ரல் 15–ந்தேதி தொடங்கியது.
மீன்பிடிக்க தயாரான மீனவர்கள்இதனால் ஆழ்கடலில் ஒருவாரம் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடலூர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. பைபர் படகு வைத்துள்ள மீனவர்கள், கடலோர பகுதியிலேயே மீன்பிடித்து வந்தனர். இருப்பினும் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்தன. இதனால் கடலூரில் மீன்களின் விலை உயர்ந்திருந்தது. இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன்(புதன்கிழமை) முடிவடைகிறது.
எனவே 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட கடலூர் துறைமுகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. ஏனெனில் நாளை(வியாழக்கிழமை) முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் தயாராகிக்கொண்டிருந்தனர். இதற்காக படகுகளில் தேவையான அளவு டீசலை நிரப்புதல், ஐஸ்கட்டிகளை நிரப்புதல், வலைகளை ஏற்றுதல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
டீசல், ஐஸ்கட்டிகளை நிரப்பினர்கடலூர் மீனவர்கள் வலையில் அதிகளவு சிக்குவது மத்திவகை மீன்களாகும். இதை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி, ஐஸ் பெட்டிகளில் வைத்து அதனை கேரளாவுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைப்பார்கள். இந்த மீன்பிடி தொழிலை நம்பி 20–க்கும் மேற்பட்ட ஐஸ் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலைகளும் நேற்று பரபரப்பாக இயங்கின. தொழிற்சாலைகளில் இருந்து லாரிகளில் ஐஸ்கட்டிகளை ஏற்றி, அதனை துறைமுகத்துக்கு கொண்டு வந்து எந்திரம் மூலம் படகுகளில் நிரப்பினர். நாளை நள்ளிரவில் படகுகளுக்கு சிறப்பு பூஜை செய்து, மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதால், வலையில் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்றும், இதனால் கடலூரில் மீன்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.