துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி சாவு கொலையா? போலீசார் விசாரணை


துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Jun 2017 5:00 AM IST (Updated: 16 Jun 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே, துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே உள்ள ஆட்டுப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சமையன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மணிகண்டன் (35), காமணன் (32), கண்ணன் (35), மற்றொரு சமையன் (38) ஆகியோருடன் ஆட்டுப்பாறை அருகே உள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலைப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக சென்றார். இதற்காக நாட்டு துப்பாக்கி ஒன்றையும் அவர் கொண்டு சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த சமையன் குடும்பத்தினர் அவரை தேடினர். இந்த நிலையில் அவருடைய நண்பர்கள், இறந்த நிலையில் சமையனை வீட்டுக்கு கொண்டு சென்றனர். சமையனின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் என்ன நடந்தது என்று நண்பர்களிடம் கேட்டனர். அப்போது அவர்கள், வேட்டையாடுவதற்காக ஒரு மரத்தின் மீது சமையன் ஏறியதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்ததாகவும், அந்த வேளையில் மரக்கிளை முறிந்து அவருடைய உடலில் குத்தியதால் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

சாவில் சந்தேகம்

இதைக்கேட்டு அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே சமையனின் உடலை வீட்டருகே வைத்துவிட்டு அவருடைய நண்பர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் அங்கு வந்த சமையனின் உறவினர்கள் அவருடைய மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த அடையாளம் இருப்பதை பார்த்தனர். இதனால் அவர்களுக்கு சமையன் சாவில் சந்தேகம் ஏற்பட்டது.

உடனே கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சமையனின் நண்பர்களையும் தேடினர். அப்போது மணிகண்டன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

குண்டு பாய்ந்து பலி

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது வேட்டைக்காக கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி பழுதானதும், அதனை சரிசெய்யும் பணியில் மணிகண்டன் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து அதில் இருந்து வெளியேறிய குண்டு சமையன் மார்பில் பாய்ந்து அவர் பலியானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், துப்பாக்கியை அப்பகுதியிலேயே மறைத்து வைத்துவிட்டு சமையனின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து வைத்துவிட்டு தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்டாரா?

இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு சதுரகிரி மலைப்பகுதிக்கு போலீசார் சென்றனர். அவர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் சென்றனர். சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றதும், துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை மணிகண்டன் அடையாளம் காட்டினார். அதனை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், வேட்டைக்கு சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு மணிகண்டன் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாரா? அல்லது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை வலைவீசி தேடி வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story