தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகை


தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகை
x
தினத்தந்தி 15 Jun 2017 11:00 PM GMT (Updated: 15 Jun 2017 9:26 PM GMT)

தவறான சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் மாதா கோவில்தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது30). இவர் பிச்சன்கோட்டகத்தில் இந்தியன் வங்கி சேவை மையம் நடத்தி வருகிறார். மேலும் 100 நாள்வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா(25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவை நேற்றுமுன்தினம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதற்கு பின்பு சுகன்யாவுக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகவும், தாயை காப்பாற்ற மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சுகன்யாவை பரிசோதித்த டாக்டர், தாயின் கர்ப்பப்பையை அகற்றினால் தான் அவரை காப்பாற்ற முடியும் என கூறினார். பின்னர் கர்ப்பப்பையை டாக்டர்கள் நீக்கிய பிறகு ரத்தப்போக்கு நிற்காததால் சுகன்யா திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முற்றுகை

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிச்சன்கோட்டகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் தலைமையில் பொதுமக்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் கர்ப்பிணி பெண் சுகன்யா இறந்ததாகவும், சிகிச்சை அளித்த டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கமல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story