மீன்பிடிக்க சென்ற போது கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
மீன்பிடிக்க சென்ற போது கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த நாகூர் சம்பாதோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது48), மீனவர். இவருக்கு இந்திராணி(45) என்ற மனைவியும், அபிலாஷ்(18), ஹரிதாஸ்(15) ஆகிய 2 மகன்களும், அபிநயா(18) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த 14–ந் தேதி நள்ளிரவு முருகனுக்கு சொந்தமான விசைப்படகில் முருகன் உள்ளிட்ட 14 பேர் நாகை கடுவையாற்றிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மாலை 4 மணியளவில் கடலில் வீசி இருந்த வலையை முருகன் இழுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அவர் கடலில் விழுந்தார். இதனை பார்த்ததும் உடனே படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து முருகனை மீட்டனர். ஆனால் முருகன் கடலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.விசாரணை
இதுகுறித்து படகில் இருந்தவர்கள் நாகூர் சம்பாதோட்ட மீனவகிராம பஞ்சாயத்தாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், இறந்த முருகனின் உடலை படகிலேயே எடுத்து நாகை கடுவையாறு பழைய மீன் இறங்குதளத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் மீனவகிராமமக்கள் அங்கு திரண்டு வந்து முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து முருகனின் உடலை கடலோர காவல்படை போலீசார் கைப்பற்றி, நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 61 நாட்கள் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.