100 அடி ரோடு பாலம் விரைவில் திறப்பு: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


100 அடி ரோடு பாலம் விரைவில் திறப்பு: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-17T02:27:59+05:30)

புதுவை 100 அடி ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும், கடலூர் ரோட்டில் ரூ.26 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

புதுச்சேரி,

பாஸ்கர்: முதலியார்பேட்டை கடலூர் ரோட்டில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு அங்கு மேம்பாலம் கட்டும் திட்டம் அரசிடம் உள்ளதா?

அமைச்சர் நமச்சிவாயம்: கடந்த 2013–ம் ஆண்டு முதல் இந்த திட்டம் ஆய்வில் உள்ளது. இதற்காக ரூ.26.70 கோடியில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு ரெயில்வே துறைக்கு ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம். 100 அடி ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒருவழியாக இன்னும் ஒரு வாரத்தில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வோம். அந்த பாலத்தின் மீதி பணிகளை இன்னும் 3 மாதங்களுக்குள் முடித்துவிடுவோம்.

நடுரோட்டில் மின்கம்பங்கள்

பாஸ்கர்: 100 அடி பாலம் வேலை முடிந்ததும் இதை செய்வீர்களா?

சிவா (தி.மு.க.): கடலூர் ரோட்டில் ரெயில்வே கேட் அடைக்கப்படும் போது நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் நிற்கின்றன. ரெயில்வே கேட் பகுதியில் போலீஸ் போடுங்கள்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: இதற்கு நடவடிக்கை எடுக்கிறோம்.

அனந்தராமன்: கோர்ட்டு பகுதியில் நடுரோட்டில் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் நடுரோட்டில் நிற்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த கம்பங்களை அகற்றி ஓரமாக நடவேண்டும்.

பள்ளி மைதானங்களில்

அன்பழகன் (அ.தி.மு.க.): எனது தொகுதியில் 4 பள்ளிகள் உள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். காலைநேரங்களில் மாணவர்களை ரோட்டில் வைத்து இறக்கிவிடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு பெரிய அளவில் விளையாட்டு மைதானங்களும் உள்ளன. அந்த மைதானத்துக்குள் அவர்களை இறக்கிவிட ஏற்பாடு செய்யுங்கள்.

அமைச்சர் கமலக்கண்ணன்: இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story