கபிலர்மலை அருகே கோழி திருடிய 2 பேர் கைது கையும், களவுமாக பிடிபட்டனர்
கபிலர்மலை அருகே, கோழி திருடிய 2 பேரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பரமத்தி வேலூர்,
கபிலர்மலை அருகே உள்ள செம்மலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று காலை இவர் வெளியில் சென்று விட்டு சுமார் 8 மணியளவில் மீண்டும் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது இவருக்கு சொந்தமான 2 கோழிகளை 2 பேர் பிடித்தபடி வந்து கொண்டு இருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற கோழி திருடிய அந்த 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
2 பேர் கைதுஇதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 2 பேரும் பரமத்தி அருகே உள்ள சேலூர் செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் நல்லுசாமி மகன் ஸ்ரீதர் (22), சண்முகம் மகன் சரவணகுமார் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.