வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்


வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:45 PM GMT (Updated: 25 Jun 2017 7:22 PM GMT)

வாடிப்பட்டியில் மாவட்ட முன்சீப், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் திறந்து வைத்தனர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதில் ஒரே அறையில், ஒரு நீதிபதியின் கீழ் 2 நீதிமன்றங்களும் இயங்கி வந்ததால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமானது. அதனால் 2 நீதிமன்றங்களையும் தனித்தனியாக வைத்திட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடத்தின் மேல்பகுதியில் கூடுதலாக புதிய தளம் கட்டப்பட்டு கட்டிடவேலை முடிந்தது.

இதில் கீழ்தளத்தில் நீதித்துறைநடுவர் நீதிமன்றமும், மேல்தளம் முதல்மாடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் செயல்பட முடிவு செய்யப்பட்டு அதற்கான நீதிபதிகளும் நியமிக்கப்பட்டு அதன் திறப்புவிழா நடந்தது. இந்த விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.ராஜா ஆகியோர் தலைமை தாங்கி கட்டிடம் மற்றும் பெயர் பலகையினை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். மாவட்ட பிரின்ஸ்பல் சென்சஸ் நீதிபதி தாரணி வரவேற்றார்.

சொந்த கட்டிடம்

விழாவில் கலெக்டர் வீரராகவராவ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வழக்கறிஞர் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் கலெக்டர் பேசியதாவது:– வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.6.75 கோடி மதிப்பில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கி ஒரு ஆண்டுக்குள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதிகள் சையதுசுலைமான்உசேன், விக்னேஷ்மது உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story