கொத்தவால்சாவடியில் வியாபாரி வீட்டில் ரூ.24 லட்சம் திருடிய வழக்கில் 3 பேர் கைது


கொத்தவால்சாவடியில் வியாபாரி வீட்டில் ரூ.24 லட்சம் திருடிய வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2017 4:15 AM IST (Updated: 26 Jun 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கொத்தவால்சாவடியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம்,

சென்னை கொத்தவால்சாவடி சார்ட்டன் முத்தையா தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 39). இவர், பாரிமுனை பகுதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 16–ந் தேதி இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர்.

தினேஷ்குமார் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்து இருந்த ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கொத்தவால்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடிவந்தனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தினேஷ்குமார் கடையில் வேலை பார்த்து வந்த அர்ஜூன்குமார்(20) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், தினேஷ்குமார் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்ற படாராம்(24) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி தினேஷ்குமார் வீட்டில் திருடியதும், இதற்கு அர்ஜூன்குமார் உதவி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 21–ந்தேதி அர்ஜூன்குமாரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சுரேஷ் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தேடிவந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் அர்ஜூன்குமார் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார், பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கீமாராம்(22), பரத் என்ற ஜோதீஷ்குமார்(24) ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள கமலேஷ், கோவிந்த், காட்டியா மற்றும் ஈமா ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story