மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-26T02:31:30+05:30)

கூத்தாநல்லூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கடைவீதியில் மதுக்கடை உள்ளது. இந்த கடையினால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வடபாதிமங்கலம் கடைவீதியில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி நேற்று கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் தாசில்தார் கண்ணன், திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், கூத்தாநல்லூர் தாசில்தார் பரஞ்ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

வலங்கைமான்

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் பொய்கை ஆற்றங்கரையில் கடந்த 23-ந் தேதி இரவு புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடையை மூடக்கோரியும் ரெகுநாதபுரம், சந்திரசேகரபுரம், வேதாம்புரம், ஆதிச்சமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்த மதுக்கடை இனிமேல் திறக்கப்பட மாட்டாது என்று கூறியதின் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story