மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மின் தடை ஏற்படுவதை கண்டித்து சாலை மறியல்
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் அவர்களை பார்க்க பொதுமக்கள், உறவினர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதால், அவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை 4.30 மணிளவில் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.