நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 July 2017 2:45 AM IST (Updated: 6 July 2017 8:31 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

வேலூரில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வேலூர் பாகாயம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தேவேந்திரன், கூலித்தொழிலாளி. இவருக்கு நவீன்குமார் (வயது 24) என்ற மகனும், நளினி (18) என்ற மகளும் உள்ளனர். நளினி, வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர், நேற்று காலை 7.45 மணி அளவில் தனது தோழிகளுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அனைவரும் வகுப்பிற்கு செல்ல கிளம்பினர். ஆனால் நளினி வகுப்பிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சகதோழிகள் 8.45 மணி அளவில் அறைக்கு சென்று பார்த்தபோது அறையில் நளினி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் சக தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி நளினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட அறையில் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று சோதனை மேற்கொண்டனர். மேலும் சக தோழிகளிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணை

இதனிடையே நளினியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நளினியின் உடலும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நளினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? அல்லது வேறு ஏதேனும் காரணமாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மாணவி நளினி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து நர்சிங் கல்லூரிக்கு செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள், டி.வி. வீடியோ கேமராமேன்கள் வந்தனர். ஆனால் அவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்களை கல்லூரி காவலாளிகள் நுழை வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும் மாணவி தற்கொலை செய்யவில்லை, பொய்யான தகவல் என மறுத்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் கல்லூரி விடுதி காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரி பொது கண்காணிப்பாளர் எபினேசர்சுந்தர்ராஜன், பத்திரிகையாளர்களிடம் நளினி என்ற மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story