ஒரத்தநாட்டில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது


ஒரத்தநாட்டில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 6 July 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாட்டில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு சோமன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது63). விவசாயி. இவருடைய மகள் அம்பிகா. பட்டதாரியான இவருக்கு கடந்த மாதம் 8–ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு தமிழக அரசு வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்க வேண்டி ராமச்சந்திரன் தனது மகள் திருமணத்துக்கு முன்பு ஒரத்தநாடு ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட ஊர்நல அலுவலர்(மகளிர்) அஞ்சலாதேவி(56) இந்த விண்ணப்பத்தை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கத்தை பெற்றுக்கொடுக்க ராமச்சந்திரனிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமச்சந்திரன் இது குறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை (ரூ.1,000) ராமச்சந்திரனிடம் கொடுத்து அஞ்சலாதேவியிடம் கொடுக்க கூறினர். இதன்படி நேற்று மாலை ஓரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற ராமச்சந்திரன், ஊர்நல அலுவலர்(மகளிர்) அஞ்சலாதேவியிடம் ரசாயனபவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய அஞ்சலாதேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கியதாக பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story