மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்


மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 9 July 2017 4:00 AM IST (Updated: 9 July 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வருகிற 14–ந் தேதி தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.ஜே.போஸ், சேசு, சகாயம், எமரிட், தட்சிணாமூர்த்தி, சேசு இருதயம் உள்பட மீனவர் சங்க தலைவர்களும், ஏராளமான மீனவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் பகுதிகளில் இலங்கை அரசு எல்லை மீறியதாக கூறி சிறைபிடிக்கப்படும் படகுகளுக்கு அபராதமும், மீனவர்களுக்கு ரூ.50,000 அபராதமும் விதிக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 141 படகுகள் பல மாதங்களாக விடுவிக்கப்படாமல் உள்ளது. அங்குள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்திய அரசு 1974–ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ளபடி பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும். அல்லது கச்சத்தீவை மீட்டு மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்யவேண்டும்.

மத்திய அரசின் மெத்தனப்போக்கால் மீன்பிடி தொழில் அழியும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், வருகிற 14–ந் தேதி ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மீனவர்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story