10 டன் வெடிபொருட்கள் பறிமுதல்: தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை


10 டன் வெடிபொருட்கள் பறிமுதல்: தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 8 July 2017 10:30 PM GMT (Updated: 8 July 2017 7:45 PM GMT)

10 டன் வெடிபொருட்கள் பறிமுதல் எதிரொலி: தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை

கோவை,

கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 10 டன் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் வஞ்சேரி அருகே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒருலாரியில் காய்கறி மூடைகளுக்கு இடையே 10 டன் வெடிபொருட்கள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த லாரி டிரைவர் சத்தியநேசன் (வயது 52), கிளீனர் கிருஷ்ணகுமார் (40), தர்மபுரி மாவட்டம் ஆச்சிவாடி ஒடச்சல்பட்டையை சேர்ந்த ரெங்கநாதன் (37), சுருளிராஜன்(37) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதிக்கு வெடிபொருட்களை கொண்டு செல்வதாக தெரிவித்து உள்ளனர். கேரள மாநில வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு கேரள மாநில போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

எனவே இந்த வெடிபொருட்கள், மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகளுக்கு வழங்குவதற்காக கடத்தி கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து தமிழக–கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தமிழக அதிரடிபடை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ள ஆனைகட்டி, கா.கா.சாவடி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகனசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர நீலகிரி மாவட்டம் கிண்ணக்கொரை, முள்ளி, பரளி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் இருந்து கேரள செல்லும் வழியில் உள்ள பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story