டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கு கொலையாளி உள்பட 3 பேர் மும்பையில் கைது

டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கில் கொலையாளி உள்பட 3 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கில் கொலையாளி உள்பட 3 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
இளம்பெண் கொலைடெல்லி மான்சரோவர் பார்க் ராம்நகரை சேர்ந்த இளம்பெண் ரியா கவுதம் என்கிற சாரு(வயது21). விமான பணிப்பெண்ணாக விரும்பிய ரியாவின் உயிர் அதே பகுதியை சேர்ந்த கொடூரன் ஒருவனால் அண்மையில் பறிக்கப்பட்டு விட்டது.
மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த மார்க்கெட்டில் கடந்த 5–ந்தேதி ஓட, ஓட விரட்டி ரியா குத்தப்பட்டார். மறுநாள் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த பயங்கர சம்பவம் தலைநகர் டெல்லியை உலுக்கியது. அத்தில் பன்னே கான்(23) என்ற கொடியவன் தான் ரியாவை கொலை செய்தவன். ரியாவை ஒருதலையாக காதலித்து வந்த அவன், தன்னுடன் பேசி பழகும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கிறான்.
சரமாரி கத்திக்குத்துபலமுறை ரியா எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. இதனால் வெறுத்துப்போன ரியா கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். ஆனால் அத்தில் பன்னே கான் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று அத்தில் பன்னே கான், ரியாவை வழிமறித்து பேசி இருக்கிறான். ரியா அவனை கண்டித்ததால் பயங்கர சண்டை உண்டானது.
அப்போது தான் அத்தில் பன்னே கான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரியாவை சரமாரியாக குத்தியிருக்கிறான். அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக மார்க்கெட்டில் உள்ள கடைக்குள் ரியா ஓடியிருக்கிறார்.
ஆனால் அங்கு அவரை காப்பாற்ற யாரும் இல்லை. இதனால் கடைக்குள் வைத்து ரியாவை பலமுறை கத்தியால் குத்தி கொலை வெறியாட்டம் போட்டுவிட்டு அத்தில் பன்னே கான் தப்பிஓடி விட்டான்.
போலீஸ் விசாரணைஇந்த பயங்கர கொலைவெறி காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. கொலை சம்பவம் குறித்து டெல்லி மான்சரோவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அத்தில் பன்னே கானுடன் அவனது கூட்டாளிகளான உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த ஜூனேத் சலீம் அன்சாரி(19) மற்றும் மைனர் வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் மூவரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மூவரும் மும்பை பாந்திராவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
3 பேர் கைதுஉடனே போலீசார் மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு பாந்திராவில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மறைந்து இருந்த ரியா கொலையில் தொடர்புடைய அத்தில் பன்னே கான் உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் மும்பை வந்த டெல்லி போலீசாரிடம் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்காக மூவரும் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர்.






