திண்டுக்கல் அருகே நடந்த இரட்டை கொலையில் 3 பேர் கைது


திண்டுக்கல் அருகே நடந்த இரட்டை கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நடந்த இரட்டை கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவரும், நல்லாம்பட்டி காவேரிநகரை சேர்ந்த மரியதாஸ் (32) என்பவரும் உறவினர்கள். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. டிரைவர்களான 2 பேருக்கும் சொந்தமாக லாரிகள் உள்ளன. இவர்கள், திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காய்கறிகளை ஏற்றி செல்வது வழக்கம். எங்கு சென்றாலும் 2 பேரும் சேர்ந்தே செல்வார்கள்.

நேற்று முன்தினம், சிறுமலை அடிவாரத்தில் உள்ள மதுக்கடை அருகே 2 பேரும் கொடூர காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்களை இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தியும் மர்ம நபர்கள் கொலை செய்திருந்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக கொலை நடந்து இருக்கலாம்? என போலீசார் முதலில் கருதினர். அதே வேளையில், விஜயகுமாரிடம் டிரைவராக வேலை செய்த சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த மருதுபாண்டி (25) என்பவர் மீதும் போலீசாரின் சந்தேக பார்வை சென்றது. இதனால், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, விஜயகுமார், மரியதாஸ் ஆகியோரை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த சக்திவேல் (20), சங்கர் (18) ஆகிய லோடுமேன்களுடன் சேர்ந்து மருதுபாண்டி கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மருதுபாண்டி கூறியிருப்பதாவது:–

நான் காய்கறிகளை ஏற்றி செல்லும் லாரிகளில் டிரைவராக வேலைக்கு செல்வேன். விஜயகுமாரிடமும் ஏற்கனவே சில மாதங்கள் டிரைவராக வேலை செய்தேன். அங்கிருந்து வந்த பிறகும் அவரோடு பழகி வந்தேன். அவருடைய வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டேன். அவர் புதிதாக சொத்துகள் வாங்கினார். அவருடைய வளர்ச்சி எனக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இதற்கு என்னுடைய நண்பர்களான சக்திவேல், சங்கர் ஆகியோரின் உதவியை நாடினேன். அவர்களும், எனக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டனர். பிறகு, விஜயகுமாரை கொலை செய்யும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அதன்படி, சம்பவத்தன்று அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்காக, சக்திவேல், சங்கர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்றேன். பிறகு, விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு மது அருந்த வரும்படி அழைப்பு விடுத்தேன். அவரும் அதை ஏற்று வந்தார். அவருடன் மரியதாசும் வந்திருந்தார். இதனால் கொலை திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போய்விடுமோ? என நினைத்தேன்.

இருந்தாலும், விஜயகுமாரை கொன்றே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்காக, நாங்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக அவரை தாக்கினோம். தடுக்க வந்த மரியதாசையும் அடித்தோம். அவர்களை கத்தியாலும் குத்தினோம்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த 2 பேரும் துடிதுடித்து இறந்தனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்ததும், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். பிறகு, ஒன்றும் தெரியாததுபோல இருந்தோம். ஆனால், போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டை கொலையில் கைதான 3 பேரிடம் இருந்தும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகள், கம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் 1–வது ஜூடிசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டிரைவர்கள் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருப்பவர் மருதுபாண்டி. சம்பவத்தன்று, 2 லோடுமேன்களுடன் சேர்ந்து விஜயகுமார், மரியதாஸ் ஆகியோரை அவர் கொலை செய்தார். கொலையுண்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இறந்தவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் கண்ணீருடன் காட்சி அளித்தனர்.

இதற்கிடையே, அங்கு இறந்தவர்களின் உடலை பார்க்க மருதுபாண்டியும் வந்தார். அவர் தனக்கு எதுவும் தெரியாதது போல கூட்டத்தினருடன் நின்றுகொண்டு இருந்தார். தான் சோகமாக இருப்பதை போல மற்றவர்களிடம் காட்டிக்கொண்டார். இருந்தாலும், அவர்தான் கொலை செய்தார் என்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story