2 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் கட்டாய விடுமுறையில் அனுப்ப வேண்டும்
சிறையில் நடந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதால் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் கட்டாய விடுமுறையில் அனுப்ப வேண்டும் என்று ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டு கூறியுள்ளார். சிறையில் முறைகேடு நடப்பது பற்றி அரசுக்கு இதுவரை தெரியாமல் இருந்ததா? என்பது பற்றி முதல்–மந்திரி சித்தராமையா முதலில் கூற வேண்டும். சிறையில் முறைகேடுகள் நடப்பது ஒன்றும் புதிது அல்ல. சசிகலாவிடம் ரூ.2 கோடி சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக வெளியான தகவலால் கர்நாடக மாநிலத்திற்கு நாடு முழுவதும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.இப்போதாவது முதல்–மந்திரி சித்தராமையா விழித்து கொள்ள வேண்டும். எனது ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று கூறுவதை முதலில் சித்தராமையா நிறுத்த வேண்டும். சிறையில் நடக்கும் ஊழல், பிற முறைகேடுகள் மூலம் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை மாநில மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் வெளியே வந்ததும் சில போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் கூறிய தகவல்படி சிறைத்துறைக்கு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் லஞ்சமாக வருவதாக தெரிவித்தனர். இதனால் லஞ்ச பணத்தை பிரித்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் தான், சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ரூபா குற்றச்சாட்டு கூறுவதாக நினைக்கிறேன். பணத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தான் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே மோதல் உண்டாகி, பிரச்சினை வெளியே தெரிந்திருக்கிறது.தற்போது இந்த விவகாரம் தொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையா உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை வெளியே வர வேண்டும் என்றால், முதலில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சத்திய நாராயணராவ், ரூபாவை கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் பணியில் இருக்கும் போதே, சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது.
சித்தராமையா நான் தான் அடுத்த முதல்–மந்திரி என்று கூறி வருகிறார். பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நான் தான் முதல்–மந்திரி ஆவேன் என்று சொல்கிறார். அவர்கள் 2 பேரும் முதல்–மந்திரி ஆக முடியாது. முதல்–மந்திரி சித்தராமையா அடுத்த ஆண்டு (2018) நடக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதலில் எம்.எல்.ஏ. ஆகிறாரா? என்பதை பார்க்கலாம்.அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ராமநகரில் ஒரு தொகுதியிலும், வடகர்நாடக மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அதுபோல நான் ஏன் போட்டியிடக்கூடாது?’’
இவ்வாறு குமாரசாமி கூறினார்.