மாணவனிடம் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியை கைது
அவுரங்காபாத்தில், மாற்றுச்சான்றிதழ் வழங்குவதற்கு மாணவனிடம் லஞ்சம் வாங்கிய பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
மும்பை,
அவுரங்காபாத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 17 வயது மாணவர் ஒருவர் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவனின் தம்பியும் அதே பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவரின் தந்தை தனது இளைய மகனை வேறொரு பள்ளியில் சேர்க்க திட்டமிட்டார். இதற்காக அவர் தனது மகனின் மாற்றுச்சான்றிதழை கேட்டு பள்ளி தலைமை ஆசிரியை சம்ஷாத் காஷியிடம் விண்ணப்பித்து இருந்தார்.
அண்மையில் மாற்றுச்சான்றிதழை வாங்கி வரும்படி அவர் தனது மூத்தமகனை அனுப்பி வைத்திருந்தார்.
அந்த மாணவன் தலைமை ஆசிரியை சம்ஷாத் காஷியிடம் சென்று மாற்றுச்சான்றிதழை கேட்ட போது அவர் 500 ரூபாய் லஞ்சமாக கேட்டு இருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவன் இதுபற்றி தனக்கு அறிமுகமான இரண்டு பேரிடம் கூறியிருக்கிறான்.பின்னர் அவர்கள் உதவியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தான். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த யோசனையின்படி சம்பவத்தன்று அவன் தலைமை ஆசிரியையை சந்தித்து பணம் கொடுத்தான். அப்போது சம்ஷாத் காஷி ரூ.200 மட்டும் எடுத்து கொண்டு மீதி 300 ரூபாயை மாணவனிடம் திருப்பி கொடுத்து விட்டார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தலைமை ஆசிரியை சம்ஷாத் காஷியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.