பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தீ விபத்து


பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 18 July 2017 3:45 AM IST (Updated: 18 July 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தீ விபத்து; பழுதான இருக்கைகள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசம்

திருச்சி,

திருச்சி பொன்மலையில் ரெயில்வே தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் மேற்கு நுழைவு வாயிலின் ஒரு பகுதியில் ரெயில் பெட்டியில் பழுதான இருக்கைகள் மற்றும் பஞ்சுகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த பொருட்களில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. நேற்று வழக்கத்தை விட காற்று அதிகமாக அடித்ததால் தீ மளமள வென மற்ற இடங்களில் குவிக்கப்பட்டு இருந்த கழிவு பொருட்கள் மற்றும் அங்கு உள்ள செடி, கொடிகளில் பிடித்து எரிந்தது.

 இதைத்தொடர்ந்து ரெயில்வேக்கு சொந்தமான தீயணைப்பு வண்டியில் விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி தனபால் தலைமையில் 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 அதே போன்று நவல்குட்டப்பட்டு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் சென்று தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 2 தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்தால் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.

 இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் ரெயில்வே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் இந்த புகை மண்டலத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியை சுற்றிலும் ரெயில்வே குடியிருப்புகள் உள்ளது. அங்கு குடியிருப்பவர்களும் இந்த புகையால் பாதிப்படைந்தனர்.


Next Story