கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 19 July 2017 4:30 AM IST (Updated: 18 July 2017 11:02 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோத்தகிரி,

மறைந்த தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 24–ந் தேதி 11 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்தது. அந்த கும்பல் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கி பங்களாவுக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றன.

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தார்.

இதற்கிடையே மற்றொரு குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த கார் விபத்தில் சிக்கி கொண்டார். இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் மகள் இறந்தனர். சயன் கோவை அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்றார்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தனிப்படை போலீசார் கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி ஆகிய 7 பேரை கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை வந்த சயன் சிகிச்சைக்கு பின் கைது செய்யப்பட்டார். இவர்கள் 8 பேரும் கோவை சிறையில் அமைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், கோடநாடு சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட காரை கேரள மாநிலத்தில் இருந்து தங்கள் பெயரில் வாடகைக்கு எடுத்து வந்த ஜம்ஷீர் அலி, ஜித்தின் ராய் ஆகியோர் மோசடி வழக்கு தொடர்பாக மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கோடநாடு சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கைதாகி கோவை சிறையில் உள்ள திபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ் சாமியார், குட்டி பிஜின் ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யபாரதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவர்கள் 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.


Next Story