புனே அருகே ஐதராபாத் ரெயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து ரெயில் சேவை பாதிப்பு


புனே அருகே ஐதராபாத் ரெயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 19 July 2017 3:30 AM IST (Updated: 19 July 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே ஐதராபாத் ரெயில் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மும்பை,

புனே அருகே ஐதராபாத் ரெயில் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

என்ஜின் தடம் புரண்டது

மும்பையில் இருந்து நேற்று மதியம் எக்ஸ்பிரஸ் ஒன்று ஆந்திர மாநிலம் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் பிற்பகல் 3.30 மணியளவில் புனே அருகே உள்ள கண்டாலாகாட் பகுதியில் மங்கிஹில் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

என்ஜின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. அப்போது என்ஜினுக்கு அடுத்த இரண்டு ரெயில் பெட்டிகள் குலுங்கின. இதனால் பயணிகள் அலறினார்கள்.

இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பயணிகள் அவதி

ரெயில்வே ஊழியர்களும் வந்து தடம் புரண்ட என்ஜினை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த பணி நடந்தது.

கல்யாண் பணிமனையில் இருந்து அங்கு மீட்பு ரெயில் சென்றது. ரெயில் என்ஜின் தடம் புரண்ட இந்த விபத்தின் காரணமாக மும்பை– புனே இடையே ரெயில் சேவையில் பாதிப்பு உண்டானது. ஐதராபாத் ரெயிலில் இருந்த பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

அண்மையில் கல்யாண் ரெயில் நிலையம் அருகே மங்கலா எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் தடம் புரண்டு மின்சார மற்றும் நீண்ட தூர ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.


Next Story