கோவில் பிரசாதத்தை ஒரே பாத்திரத்தில் வைத்து வழங்க ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் பிரசாதத்தை ஒரே பாத்திரத்தில் வைத்து வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 July 2017 3:15 AM IST (Updated: 23 July 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

பாகுபாடு காட்டுவதாக வழக்கு: கோவில் பிரசாதத்தை ஒரே பாத்திரத்தில் வைத்து வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை,

மதுரையை அடுத்த வீரபாண்டி திருமால்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் வீரபாண்டி கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் பெண்கள் முளைப்பாரி எடுத்து செல்வது வழக்கம். அனைத்து சமுதாயத்தினரும் திருவிழாவிற்காக வரி செலுத்துகின்றனர். ஆனால் திருவிழாவின் ஒரு பகுதியான முளைப்பாரி எடுத்துச் செல்வதற்கு ஆதிதிராவிடர்களை அனுமதிப்பதில்லை.

இதுகுறித்து ஏற்கனவே தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்படும். இதில் பாகுபாடு காட்டப்படுகிறது. கூழை ஆதிதிராவிடர்களுக்கென ஒரு அண்டாவிலும், பிற சமுதாயத்தினருக்கு தனி அண்டாவிலும் வைத்து வழங்குகிறார்கள். எனவே செல்லாயி அம்மன்கோவில் திருவிழா பிரசாதத்தை பாகுபாடின்றி வழங்கவும், ஆதிதிராவிடர்கள் முளைப்பாரி திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து, "கோவில் பிரசாதமான கூழை ஒரே அண்டாவில் வைத்து போலீசார் முன்னிலையில் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். முளைப்பாரி திருவிழா தொடர்பாக கீழ்கோர்ட்டில் மனுதாரர் நிவாரணம் தேடிக்கொள்ளலாம்" என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story