குண்டர் சட்டத்தில் இளம்பெண் கைதானதை ரத்து செய்யக்கோரி சேலம் சிறையில் மாவோயிஸ்டு கைதி திடீர் உண்ணாவிரதம்


குண்டர் சட்டத்தில் இளம்பெண் கைதானதை ரத்து செய்யக்கோரி சேலம் சிறையில் மாவோயிஸ்டு கைதி திடீர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 25 July 2017 11:51 PM GMT (Updated: 25 July 2017 11:51 PM GMT)

குண்டர் சட்டத்தில் இளம்பெண் கைதானதை ரத்து செய்யக்கோரி சேலம் மத்திய சிறையில் மாவோயிஸ்டு கைதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்தவர் பழனிவேலு(வயது36). இவர் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர். அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக பழனிவேலு மீது தேனி, மேட்டூர் மற்றும் கேரளா மாநிலத்தில் வழக்குகள் உள்ளன.

மேலும் வீராணத்தில் கடந்த 2001–ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கிலும் அவர் தொடர்புடையவர். போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக திரிந்த பழனிவேலுவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வீராணம் அருகே உள்ள பீமானூரை சேர்ந்த மாரியப்பன். இவரது மகள் வளர்மதி(வயது23). வேளாண் துறையில் பட்டம் பெற்ற இவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் மேற்படிப்பு படித்து வந்தார். வளர்மதி, போலீசாரின் மாவோயிஸ்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் என்றும், பல்வேறு இடங்களில் போராட்டத்தை தூண்டியதாக அவர் மீது வழக்கும் உள்ளது. மேலும் வளர்மதி, மாவோயிஸ்டு பழனிவேலுவின் ஆதரவாளர்.

இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவிகளிடம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடவும், கதிராமங்கலம் போராட்டத்தில் பங்கேற்கவும் கூறி துண்டு பிரசுரங்களை கொடுத்து மாணவிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவரை, ஓராண்டு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர்தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். பெரியார் பல்கலைக்கழகத்தில் வளர்மதி மேற்படிப்பில் சேர்ந்து படித்ததையும் இடைநீக்கம் செய்து பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சேலம் 4–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், சேலத்தில் கைதான வழக்கில் வளர்மதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளதால் சிறையில் இருந்து வளர்மதி வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாவோயிஸ்டு பழனிவேலு நேற்று காலை முதல் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய சிறையில் 9–வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு வழக்கம்போல காலை உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட மறுத்து அவர், தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியதற்காக, வளர்மதி மீது பொய்வழக்கு பதிந்து போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், எனது ஆதரவாளர் என்பதற்காக போலீசார் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டி உண்ணாவிரதம் இருப்பதாக சிறைக்காவலர்களிடம் தெரிவித்தார்.

மத்திய சிறையில் மாவோயிஸ்டு கைதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story