திருக்கோவிலூர் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்


திருக்கோவிலூர் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 July 2017 10:00 PM GMT (Updated: 2017-07-27T00:52:30+05:30)

திருக்கோவிலூர் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கெங்கவரம் கிராமத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுத்த உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் கெங்கவரம் கிராமத்தில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சத்யா (வயது 24), பாலு மனைவி சித்ரா (வயது 45) மற்றும் ஆறுமுகம் (வயது 64) ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தம் 540 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சத்யா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றியபோது அப்பகுதியை சேர்ந்த மக்கள், எங்கள் கிராமத்தில் இவர்கள் மட்டும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யவில்லை. மேலும் பலர் விற்பனை செய்கிறார்கள். அவர்களையும் கண்டித்து பிடித்து கைது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை யெனில் போலீஸ் வேனை இங்கிருந்த செல்ல விடமாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் அளித்த தகவலின் படி அதே ஊரைச்சேர்ந்த கார்த்திகேயன், அன்பரசு, பொன்னுவேல், அலமேலு, முருகன், செந்தில்குமார், பூங்கொடி மற்றும் செல்வி ஆகியோர் வீடுகளிலும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களின் வீடுகளில் இருந்த மொத்தம் 1,460 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கார்த்திகேயன் உள்பட 8 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். போலீசாரின் இத்தகையை நடவடிக்கையை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் பாராட்டினார்.


Next Story