திருச்சுழி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்


திருச்சுழி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2017 10:30 PM GMT (Updated: 2017-07-27T01:18:43+05:30)

திருச்சுழி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது வேளானூரணி ஊராட்சி. இந்த ஊர் அம்மன்பட்டி, உடையசேர்வக்காரன்பட்டி, வலையப்பட்டி, உலகத்தேவன்பட்டி, கஞ்சமநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. இங்கு மொத்தம் 10 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. வேளானூரணி ஊராட்சிக்கு இலுப்பையூரில் இருந்து 2 கி.மீ. தூர சாலை கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை பராமரிப்பு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்து போராடி வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வேளானூரணியில் அரசு பள்ளிகள் எதுவும் இல்லை. இங்குள்ள பள்ளி மாணவர்கள் 2 கி.மீ. பழுதடைந்த சாலையில் நடந்து இலுப்பையூருக்கு வந்து செல்கின்றனர். பழுதடைந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மாணவர்கள் விழுந்து காயம் ஏற்படும் நிலையும் உள்ளது.

இந்தநிலையில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் திடீரென்று மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த திருச்சுழி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா, சப்–இன்ஸ்பெக்டர்கள் அசோக்பாபு, ரா£ஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை பராமரிப்பு பணியினை உடனே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்வதாக பொதுமக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் இதுகுறித்து கலெக்டர், தாசில்தார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனுவினை பொதுமக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story