புதுவை, தமிழக பகுதிகளில் கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் கைது


புதுவை, தமிழக பகுதிகளில் கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் கைது
x
தினத்தந்தி 1 Aug 2017 4:30 AM IST (Updated: 1 Aug 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். பகலில் நோட்டமிட்டு இரவு நேரங்களில் அவர்கள் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

காலாப்பட்டு,

விழுப்புரம் மாவட்டம் சின்னக்கோட்டக்குப்பத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைந்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் போலீசார் சோதனை செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் கோவிலுக்கு வந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கேமராவில் பதிவாகி இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 24), உருளையன்பேட்டை (செல்வம் 42), வழுதாவூர் கலித்திரம்பேட்டை கோகுலகிருஷ்ணன் (22), பத்துக்கண்ணு பிள்ளையார்குப்பம் சிலம்பரசன் (23) என்பது தெரியவந்தது.

போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது கோவில் பூட்டை உடைந்து அம்மன் கழுத்தில் இருந்த நகையை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அதாவது, இவர்கள் 4 பேரும் டிப்–டாப் உடை அணிந்து பகல் நேரத்தில் கோவிலுக்கு சென்று பூசாரிகளிடம் பேசி கோவில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்வார்கள். அப்போது அம்மனுக்கு போடப்பட்டு இருக்கும் நகைகள், உண்டியல் போன்றவற்றை நோட்டமிட்டு கவனிப்பார்கள். பின்னர் இரவு நேரத்தில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கோவில்களில் கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

அதுபோல் வில்லியனூர், வானூர், கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர்.

சிறைப்பறவையான சிலம்பரசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுத்துக்கேணி பகுதியில் உள்ள கோவில் உண்டியல் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். தற்போது மீண்டும் கோவில்களில் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story