கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் போலீஸ் தேடிய வாலிபர் கைது


கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் போலீஸ் தேடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2017 8:00 AM IST (Updated: 2 Aug 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில், போலீஸ் தேடிய சதாம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்(வயது 35). செய்தி தொடர்பாளராக இருந்த இவர், இந்து முன்னணி இயக்க நிகழ்ச்சிகளில் தீவிரமாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந்தேதி இரவு 11.15 மணியளவில், துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்ற கும்பல், அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே வைத்து கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலையை தொடர்ந்து கோவையில் பதற்றம் ஏற்பட்டது. மறுநாள் 23–ந்தேதி அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். அப்போது ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன.

சசிகுமார் கொலை வழக்கை முதலில், கோவை மாவட்டம் துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டுகள் ஆர்.விஜயராகவன், எஸ்.ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் ஆனந்த ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸ் படை அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

1000–க்கும் மேலானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, இந்த கொலையில் கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த சதாம்(வயது27), அதே பகுதியை சேர்ந்த முபாரக்(28) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சதாம் மற்றும் முபாரக் ஆகியோர் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்து இருந்தனர். அவர்களது புகைப்படங்களை இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் நோட்டீசுகள் அச்சிடப்பட்டு கேரளா, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் பல இடங்களில் ஒட்டப்பட்டது.

கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தனிப்பிரிவு போலீசார் துப்புதுலக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். மேலும் சதாம், முபாரக் ஆகியோரின் செல்போன் எண்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடனும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

சசிகுமார் கொலையில், குற்றவாளிகள் தொடர்பான தகவல் தெரிந்தும் அதனை மறைத்ததாக சாய்பாபா காலனியை சேர்ந்த அபுதாகீர்(27) என்ற வாலிபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 11 மாதங்களாக தலைமறைவாக இருந்த சதாம், கருமத்தம்பட்டியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை தனிப்படையினர் விரைந்து சென்று கருமத்தம்பட்டி பஸ் நிலைய பகுதியில் பதுங்கி இருந்த சதாமை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்றது.

சசிகுமாரை, சதாம் மற்றும் முபாரக் ஆகியோர் சில கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்றதாக வாக்குமூலம் அளித்து இருப்பதாகவும், அவர் கொடுத்த தகவலின் பேரில் முபாரக் உள்பட மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

11 மாதங்களுக்கு பின்னர் சசிகுமார் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சதாமை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸ் அதிகாரிகளை, கூடுதல் டி.ஜி.பி. கே.ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தாமரைக்கண்ணன் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story