கடம்பூரில் வியாபாரிகள் கடையடைப்பு– ஆர்ப்பாட்டம் பழுதடைந்த ரெயில் நிலைய சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


கடம்பூரில் வியாபாரிகள் கடையடைப்பு– ஆர்ப்பாட்டம் பழுதடைந்த ரெயில் நிலைய சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Aug 2017 2:30 AM IST (Updated: 4 Aug 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூரில் பழுதடைந்த ரெயில் நிலைய சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டம்

கயத்தாறு,

கடம்பூரில் பழுதடைந்த ரெயில் நிலைய சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலைய சாலை

கயத்தாறில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் மெயின் ரோட்டில் கடம்பூர் ரெயில் நிலையம் உள்ளது. கடம்பூர் ரெயில் நிலையத்தை கடந்து செல்லும் வகையில் இருந்த ரெயில்வே கேட் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அதற்கு பதிலாக கடம்பூர் ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதி வழியாக சுற்றிச்செல்லும் வகையில், தற்காலிக பாதை அமைக்கப்பட்டது.

இதில் ஜல்லி கற்கள் மட்டும் நிரப்பி சமப்படுத்தி இருந்தனர். இதனால் மழைக்காலத்தில் ஜல்லிகற்கள் பெயர்ந்து பாதை சிதிலம் அடைந்தது. இதனால் இந்த சாலையை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும், இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடையடைப்பு

எனவே பழுதடைந்த ரெயில் நிலைய சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கடம்பூரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், வியாபாரிகள் சங்கம், ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. கயத்தாறு பஜார் உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் ஓடவில்லை.

ஆர்ப்பாட்டம்

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கடம்பூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், நகர செயலாளர் ராகவன், ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், நவநீதகண்ணன், கூட்டுறவு சங்க தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன்,

நகர காங்கிரஸ் தலைவர் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், சுப்பையா, துரைராஜ் மற்றும் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story