மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் 2–வது நாளாக வருமான வரி சோதனை


மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் 2–வது நாளாக வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 4 Aug 2017 3:30 AM IST (Updated: 4 Aug 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் 2–வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் இதுவரை ரூ.11.43 கோடி ரொக்கம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் 2–வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் இதுவரை ரூ.11.43 கோடி ரொக்கம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கைக்கு பாத்திரமானவர்

கர்நாடக மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவர் கர்நாடக அரசில் அதிகாரமிக்க மந்திரியாக உள்ளார். இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் இருந்து காலியாகும் 3 மேல்–சபை உறுப்பினர்கள் பதவிக்கு வருகிற 8–ந் தேதி தேர்தல் நடக்கிறது. அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜனதாவுக்கு தாவினர்.

இதனால் மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்க அவர்கள் பெங்களூரு புறநகர் பகுதியில் ‘ஈகிள்டன்‘ என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் காங்கிரஸ் மேலிடம் வழங்கியுள்ளது. இதையடுத்து மந்திரி டி.கே.சிவக்குமார் அந்த சொகுசு விடுதியில் தங்கி குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து வந்தார்.

2–வது நாளாக வருமான வரி சோதனை

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு வந்தனர். அவர்கள் அங்கு மந்திரி டி.கே.சிவக்குமார் தங்கி இருந்த அறையில் தீவிர சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவரை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்து, அங்கு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் பெங்களூரு, டெல்லி, மைசூரு, கனகபுரா ஆகிய இடங்களில் உள்ள மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அவருடைய உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 64 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்தது. இதில் ரூ.10 கோடி ரொக்கம் சிக்கியது.

2–வது நாளாக வருமான வரி சோதனை

இந்த நிலையில் 2–வது நாளாக நேற்றும் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான சதாசிவநகரில் உள்ள வீடு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். டி.கே.சிவக்குமார் சதாசிவநகர் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவர் அங்கிருந்து எங்கும் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளும் அங்கேயே தங்கினர். கணக்கு தணிக்கையாளர்கள் மூலம் சொத்து ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் இதுவரை டெல்லி, பெங்களூரு, மைசூரு ஆகிய 3 இடங்களில் ரூ.11.43 கோடி ரொக்கம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் டெல்லியில் ரூ.8.33 கோடியும், பெங்களூருவில் ரூ.2.50 கோடியும், மைசூருவில் ரூ.60 லட்சமும் சிக்கியுள்ளது. மேலும் தங்க நகைகள், ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பினாமி சொத்துகள் இருப்பதற்கான...

ஏராளமான ஆவணங்கள், தொழில் தொடர்பான கணக்கு புத்தகங்கள், நிதி ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் காரணமாக வருமானவரித் துறை அதிகாரிகள் ஆதாரங்களை திரட்ட இன்னும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் வாங்கி குவித்துள்ள சொத்துகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்குரிய பதிலை பெற்றுள்ளனர்.

பினாமி சொத்துகள் இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். டி.கே.சிவக்குமார் ரியல் எஸ்டேட், தங்க நகை வியாபாரம் மற்றும் இதர தொழில்களில் முதலீடுகள் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடுகளிலும்...

சிங்கப்பூர் உள்பட சில வெளிநாடுகளிலும் டி.கே.சிவக்குமார் முதலீடு செய்துள்ளது குறித்து வருமான வரி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பெங்களூரு காவேரி பவனில் உள்ள கர்நாடக மின்சார கழக நிறுவன அலுவலகத்திலும் வருமானவரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசு வருமானவரி சோதனை நடத்தி வருவதாக கூறியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று மந்திரியின் சதாசிவநகர் வீடு அருகே, பெங்களூரு டவுன்ஹால், சாம்ராஜ்நகர், மைசூரு உள்பட பல இடங்களில் இளைஞர் காங்கிரசார் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின் போது பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story