3-வது நாளாக வருமானவரி சோதனை தொழில் பங்குதாரர் வீட்டில் 16 ‘லாக்கர்கள்’ கண்டுபிடிப்பு


3-வது நாளாக வருமானவரி சோதனை தொழில் பங்குதாரர் வீட்டில் 16 ‘லாக்கர்கள்’ கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2017 4:00 AM IST (Updated: 5 Aug 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு- அலுவலகங்களில் நேற்று 3-வது நாளாக வருமானவரி சோதனை நீடித்தது.

பெங்களூரு,

மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு- அலுவலகங்களில் நேற்று 3-வது நாளாக வருமானவரி சோதனை நீடித்தது. இந்த சோதனையின்போது டி.கே.சிவக்குமாரின் தொழில் பங்குதாரர் வீட்டில் 16 ‘லாக்கர்கள்’ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்து தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கின.

கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. அப்போது பல்வேறு சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

டெல்லி மேல்-சபை தேர்தல்


கர்நாடக மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் அகில காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். கர்நாடக காங்கிரஸ் அரசில் அதிகாரமிக்க மந்திரியாக வலம் வருபவர். கல்குவாரி, ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

குஜராத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குஜராத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜனதாவுக்கு தாவினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியின் மேலிடம் ஒன்று திரட்டி பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தது. குஜராத்தை சேர்ந்த 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு புறநகர் ‘ஈகிள்டன்‘ என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரூ.15 கோடி ரொக்கம்-நகைகள்


அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் அந்த சொகுசு விடுதியில் தங்கி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள், மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட மொத்தம் 64 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

மேலும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ‘ஈகிள்டன்‘ சொகுசு விடுதியிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு அறை அறையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அங்கு தங்கி இருந்த டி.கே.சிவக்குமாரின் அறையிலும் சோதனையில் ஈடுபட்டனர். அவரை அழைத்துக் கொண்டு பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது உள்ளே சென்றவர்கள் இதுவரை வெளியே வரவில்லை. மந்திரி டி.கே.சிவக்குமார் 3 நாட்களாக சதாசிவநகர் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வரை ரூ.11.43 கோடி ரொக்கம் மற்றும் ரூ.4.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

3-வது நாளாக வருமான வரி சோதனை

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சதாசிவநகர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து நடத்தினர். மேலும் டி.கே.சிவக்குமாரின் நெருங்கிய நண்பரும், ஜோதிடருமான துவாரகநாத், மைசூருவில் உள்ள டி.கே.சிவக்குமாரின் மாமனார் திம்மையா ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை 3-வது நாளாக நீடித்தது. இந்த சோதனையின்போது ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டி.கே.சிவக்குமாரின் நண்பர்கள், உறவினர்கள், தொழில் பங்குதாரர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் சதாசிவநகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு எடுத்து வந்தனர். வங்கி கணக்கு புத்தகங்கள், அவருடைய வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் நடந்த விவரங்கள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரி அதிகாரிகள் கேள்விகளை கேட்டு அதற்குரிய பதிலை பெற்றுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால் அதற்கு பதிலளித்து டி.கே.சிவக்குமார் சோர்ந்துபோய்விட்டதாக கூறப்படுகிறது.

பணத்தை பறிமுதல் செய்யவில்லை

இந்த சோதனை நேற்று நடந்து கொண்டிருந்தபோது டி.கே.சிவக்குமாரின் சகோதரரான டி.கே.சுரேஷ் எம்.பி. சதாசிவநகர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் அரசியல்வாதிகள். பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறோம். அனைத்து கணக்கு விவரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். வருமான வரி அதிகாரிகள் நடத்தியுள்ள சோதனையில் எங்கள் வீடுகளில் இருந்து எந்த பணத்தையும் பறிமுதல் செய்யவில்லை. வருமான வரி அதிகாரிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை நாங்கள் வழங்குகிறோம்“ என்றார்.

16 லாக்கர்கள்

இதற்கிடையே மந்திரி டி.கே.சிவக்குமாரின் தொழில் பங்குதாரரான பிரபல ‘சர்மா டிராவல்ஸ்’ உரிமையாளர் சுனில்குமார் சர்மா வீட்டிலும் நேற்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெங்களூரு என்.ஆர்.காலனில் உள்ள சுனில்குமார் சர்மாவின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் அவருடைய வீட்டில் 16 லாக்கர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் நேற்று இரவு வரை சுமார் 10 பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து பார்த்தனர்.

தங்க நகைகள், ஆவணங்கள்

இதில் கிலோ கணக்கில் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மீதமுள்ள பாதுகாப்பு பெட்டகங்களையும் திறக்க வருமான வரி அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். சர்மா டிராவல்ஸ் நிறுவனத்தில் டி.கே.சிவக்குமார் சுமார் 35 சதவீத பங்குகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல் டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீடுகளிலும் 3-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவருடைய நெருங்கிய ஆதரவாளர் ஆஞ்சனேயாவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story