வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் தடுப்பு வேலி அமைக்க ரெயில்வே தண்டவாளங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும்
வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் தடுப்பு வேலிகள் அமைக்க ரெயில்வே தண்டவாளங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
கொள்ளேகால்,
வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் தடுப்பு வேலிகள் அமைக்க ரெயில்வே தண்டவாளங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபுவை சந்தித்து துருவநாராயண் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
காட்டு யானைகள் அட்டகாசம்மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவை நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துருவநாராயண் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கர்நாடக மாநிலத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவது மட்டுமல்லாமல், மக்கள் தினமும் பீதியுடன் வசித்து வருகிறார்கள். எனவே வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க, வனப்பகுதிகளை ஒட்டி ரெயில்வே தண்டவாளங்களை கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
கோரிக்கைஇதனால் பயன்படாமல் கிடக்கும் ரெயில்வே துறைக்கு சொந்தமான ரெயில்வே தண்டவாளங்களை குறைந்த விலையில் கர்நாடக வனத்துறையினருக்கு வழங்க வேண்டும் என்று மாநில அரசு மத்திய ரெயில்வே துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் இதுவரை அந்த கோரிக்கை குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதனால், இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம் மனு வழங்கினேன். இந்த கோரிக்கை குறித்து தனது துறை அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.