தீவுகளை சுற்றி பாசி எடுக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் மீனவ பெண்கள் மனு
தீவு பகுதிகளை சுற்றி பாரம்பரிய தொழிலான பாசி எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மீனவ பெண்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் திரளாக வந்து மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் கடல்பாசி சேகரிக்கும் மீனவ பெண்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வாலிநோக்கம், முந்தல் வரையிலான பகுதிகளில் 50–க்கும் அதிகமான மீனவ கிராமங்களை சோந்த ஏராளமான மீனவ பெண்கள் கடலில் இறங்கி கடல்பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் பவளப்பாறைகளை பாதிக்காதவாறு சுண்ணாம்பு பாறைகளில் வளர்ந்துள்ள பாசிகளை சேகரித்து ஆண்டாண்டு காலமாக பிழைப்பு நடத்தி வருகிறோம்.
ஆனால், தற்போது வனத்துறை அதிகாரிகள் தீவுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் எங்களை தீவுகளின் அருகில் கூட செல்ல விடாமல் தீவுகளை சுற்றி தொழில் செய்வதையும் தடுத்து வழக்கு பதிந்து அபராதம் விதித்து வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றனர். தீவுகளின் அருகில் பாசி சேகரிக்கும் எங்களை படகுடன் தனியாக நிறுத்தி தவிக்கவிட்டுவிட்டு படகில் உள்ள ஆண்களை மட்டும் அழைத்து சென்று அபராதத்தை செலுத்தினால் தான் விடுகின்றனர். இதனை வனத்துறையினர் நிறுத்தி எங்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
திருப்புல்லாணி அருகே உள்ள முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் பஸ் நிறுத்தம் பகுதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களின் பாதுகாப்பிற்காக வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வேகத்தடை அகற்றப்பட்டுள்ளதால் சாலைகளை கடக்கும் மாணவ–மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
முதுகுளத்தூர் யூனியன் ஆண்டிச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் அளித்த மனுவில், கடந்த பல மாதங்களாக குடிநீருக்காக அவதிப்பட்டு வரும் தங்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
தாமோதரன்பட்டினம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடை எதிர்ப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அந்த பகுதியில் கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இப்பகுதியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த கடையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.