திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்


திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகருக்குட்பட்ட துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகளில் ஆயிரக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் தினக்கூலி அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கலெக்டர் மூலம் ஊதிய உயர்வு அறிவிப்பாணை வெளியிடப்படும். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டின் ஊதிய அறிவிப்பாணை கடந்த மார்ச் மாதம் 31–ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. கடந்த அறிவிப்பாணையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.297 தினக்கூலியாக அறிவிக்கப்பட்டது. இது அவர்களுக்கு போதவில்லை. எனவே, நாங்கள் இந்த ஆண்டு ஊதிய உயர்வு குறித்த செயல்முறை ஆணை வெளியிடும்போது இன்றைய விலைவாசி உயர்வு, துப்புரவு தொழிலாளர்களின் பணிநிலைகளையும் கணக்கில் கொண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.500 அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊத்துக்குளி பல்லக்கவுண்டம்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் அந்த பகுதியில் உள்ள பொதுகழிவறை குழியில் இருந்து அவ்வப்போது மனித கழிவுகளை எடுத்து திறந்த வெளியில் ஒருசிலர் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் கருவம்பாளையம் கிழக்கு பகுதி தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க குடிசை மாற்று வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தோம். இதில் 36 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story