15 கிலோ பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
தானேயில், குடோனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்து 15 கிலோ எடையுடைய பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை,
தானேயில், குடோனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்து 15 கிலோ எடையுடைய பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து பயங்கரவாத தடுப்புபடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானே டைகர் பகுதியில் இஸ்மாயில் சேக் என்பவருக்கு சொந்தமான ஒரு குடோன் உள்ளது. இந்த குடோனில் பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் பயங்கரவாத தடுப்புபடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அந்த குடோனுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஒரு சாக்குப்பை இருப்பதை பார்த்தனர்.
போலீசார் அந்த சாக்குபையை திறந்து பார்த்தபோது, அதில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட், 9 டெட்டனேட்டர் குச்சிகளும் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். அவை 15 கிலோ எடை கொண்டதாக இருந்தன. இதில் சில மின்சார வயர்களும் இருந்தன.போலீசார் இது தொடர்பாக குடோன் உரிமையாளர் இஸ்மாயில் சேக், அவரது மகன் அப்துல்லா சேக், மகேந்திர நாயக் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த வெடிபொருட்கள் கல்யாண் ரெயில் நிலையத்திற்கு உத்தரபிரதேச மாநிலம் அசாம்கார் பகுதியில் இருந்து ரெயிலில் கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. நாசவேலைக்காக இந்த வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டதா? என்பதை கண்டறிய கைதான் 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story