டெங்கு காய்ச்சலால் மாணவர்கள் பாதிப்பு: கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரிக்கு 15–ந் தேதி வரை விடுமுறை
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ– மாணவிகள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கு 28 குடியிருப்புகள் உள்ளன. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கல்லூரி வளாகத்தில் விவசாய பண்ணை நிலங்களில் பல்வேறு பயிர் சாகுபடிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கல்லூரி விடுதி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நெல்லை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற போது, 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேருக்கும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தவிர மேலும் சில மாணவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வருகிற 15–ந் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. விடுதி மாணவர்களை, கல்லூரி நிர்வாகம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது.