பிளஸ்–1 வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி வழக்கு தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்


பிளஸ்–1 வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி வழக்கு தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 8 Aug 2017 11:00 PM GMT (Updated: 8 Aug 2017 7:16 PM GMT)

பிளஸ்–1 வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரிய வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பிளஸ்–1 வகுப்பிலும் வரும் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேவையற்றது. எனவே பிளஸ்–1 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் பூதலிங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைக்கு பிறகு தான் பிளஸ்–1 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது என்ற முடிவை தமிழக அரசு எடுத்தது. பிளஸ்–2 வகுப்பில் 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். அதை 2 ஆக பிரித்து பிளஸ்–1 வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களும், பிளஸ்–2 வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்கள் என்ற அடிப்படையிலும் தான் இனி தேர்வுகள் நடைபெறும். பிளஸ்–1 வகுப்பில் தோல்வி அடைந்தாலும் பிளஸ்–2 படித்துக்கொண்டே தோல்வியடைந்த பாடங்களை எழுதி வெற்றி பெறலாம். அதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை.

பிளஸ்–2 முடித்து பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் முதல் பருவத்திலேயே 21 சதவீதம் பேர் கணிதத்தில் தோல்வி அடைந்து விடுகின்றனர். இந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் பிளஸ்–1 பாடங்களில் இருந்து தான் பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்–1 வகுப்பை புறக்கணித்துவிட்டு, பிளஸ்–2 பாடத்துக்கு சில பள்ளிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில், ‘தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வை சந்திப்பதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story